சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1326   திருவெழுகூற்றிருக்கை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 113 )  

ஓருரு வாகி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா
ஓருரு வாகிய தாரகப் பிரமத்
     தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
          ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
இருபிறப் பாளரி னொருவ னாயினை
     ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
          மூவரும் போந்து இருதாள் வேண்ட
               ஒருசிறை விடுத்தனை
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
     முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
     மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
               அறுகு சூடிக் கிளையோ னாயினை
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
     முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
          கொருகுரு வாயினை
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
          ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
               எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
          டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
     ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
          ஏரகத் திறைவ னென இருந்தனையே.
Easy Version:
ஓருருவாகிய தாரகப் பிரமத்து
ஒருவகைத் தோற்றத்து
இருமரபெய்தி
ஒன்றாய் ஒன்றி
இருவரிற் தோன்றி
மூவாதாயினை
இருபிறப்பாளரின்
ஒருவன் ஆயினை
ஓராச் செய்கையின்
இருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒருசிறை விடுத்தனை
ஒருநொடியதனில் இருசிறை மயிலின்
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச
நீ வலம் செய்தனை
நால்வகை மருப்பின்
மும்மதத்து
இருசெவி ஒருகை பொருப்பன்
மகளை வேட்டனை
ஒருவகை வடிவினில்
இருவகைத்து ஆகிய
மும்மதன் தனக்கு
மூத்தோன் ஆகி
நால்வாய் முகத்தோன்
ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக்கு
இளையோன் ஆயினை
ஐந்தெழுத்து அதனில்
நான்மறை உணர்த்து
முக்கட் சுடரினை
இருவினை மருந்துக்கு
ஒரு குருவாயினை
ஒருநாள்
உமையிரு முலைப்பால் அருந்தி
முத்தமிழ் விரகன்
நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன்
அறுமுகன் இவன் என
எழில்தரும் அழகுடன்
கழுமலத்து உதித்தனை
அறுமீன் பயந்தனை
ஐம் தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து
முத்தலைச் செஞ்சூட்டு
அன்றிலங் கிரி
இரு பிளவாக
ஒரு வேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி
ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற
ஏரகத்து இறைவன் என இருந்தனையே.
Add (additional) Audio/Video Link

ஓருருவாகிய தாரகப் பிரமத்து ... ஒரு (1) பொருளாகிய
பிரணவமாம் முழுமுதலின்
ஒருவகைத் தோற்றத்து ... (சிவனின் ஐந்து முகங்களோடு
அதோமுகமும் சேர்ந்த) ஒரு (1) வகையான தோற்றத்தில்,
இருமரபெய்தி ... சக்தி சிவம் என்னும் இரண்டின் (2) லக்ஷணங்களும்
அமைந்து,
ஒன்றாய் ஒன்றி ... அதுவே ஓர் (1) உருவாகச் சேர்ந்து,
இருவரிற் தோன்றி ... சக்தி சிவம் என்ற இருவரிடமும் (2) தோன்றி,
மூவாதாயினை ... மூப்பே (3) இல்லாது என்றும் இளமையோடு
விளங்குகிறாய்.
இருபிறப்பாளரின் ... [உபநயனத்துக்கு முன்னும் பின்னும்] இரு (2)
பிறப்புக்களை உள்ள அந்தணர் குலத்தில்
ஒருவன் ஆயினை ... ஒப்பற்ற ஒருவனாக (1) விளங்கிய
திருஞானசம்பந்தராய் அவதரித்தாய்.
ஓராச் செய்கையின் ... [ஓரா - இரு பொருள் - ஒன்று (1) மற்றும்
தெரியாமல்] பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த காரணமாக,
இருமையின் (2) முன்னாள் (3) ... [இருமை - இரு பொருள் -
இரண்டு (2) மற்றும் கர்வம்) கர்வத்துடன் பிரம்மா முன்னாளில்
(முன்னாள் = இரு பொருள் - மூன்று (3) மற்றும் முன்பொரு நாள்]
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து ... நான்கு (4)
முகங்களுடைய பிரமனின் குடுமியை கணநேரத்தில் (கைகளால்
குட்டிக்) கலைத்து,
மூவரும் போந்து இருதாள் வேண்ட ... அரி, அரன், இந்திரன்
ஆகிய மூவரும் (3) உன்னை அடைந்து உன்னிரு (2) பாதங்களில்
பணிந்து முறையிட்டு வேண்ட,
ஒருசிறை விடுத்தனை ... பிரமனை நீ அடைத்த ஒரு (1)
சிறையினின்றும் விடுவித்தாய்.
ஒருநொடியதனில் இருசிறை மயிலின் ... ஒரு (1)
நொடிப்பொழுதில் இரண்டு (2) சிறகுகள் உடைய மயிலில் ஏறி,
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச ... மூன்று (3) பக்கங்களிலும் நீர்
உள்ள கடல்களை ஆடையாக உடுத்தியுள்ள, முல்லை, குறிஞ்சி, மருதம்,
நெய்தல் என்ற நால் (4) வகையான நிலம் படைத்த இவ்வுலகமே அஞ்ச
(5) (அஞ்ச என்றால் ஐந்து -5- என்றும் பயப்பட என்றும் இரு பொருள்),
நீ வலம் செய்தனை ... நீ உலகை வலம் வந்தாய்.
நால்வகை மருப்பின் ... நான்கு (4) விதமான தந்தங்களை
உடையதும் (ஐராவத யானைக்கு நான்கு தந்தங்கள்),
மும்மதத்து ... மூன்று (3) வகையான மதம் பிடிக்கக் கூடியதும்,
இருசெவி ஒருகை பொருப்பன் ... இரண்டு (2) காதுகளையும், ஒரு
(1) துதிக்கையையும் கொண்ட மலை போன்ற ஐராவதத்தை உடைய
இந்திரனின்
மகளை வேட்டனை ... மகளாகிய தேவயானையை மணம் செய்து
கொண்டனை.
ஒருவகை வடிவினில் ... ஒரு (1) வகையான யானை வடிவிலே
இருவகைத்து ஆகிய ... இள யானை, கிழ யானை என இரு (2)
வடிவிலும் வரவல்லதும்,
மும்மதன் தனக்கு ... கன்ன மதம், கை மதம், வாய் மதம் என்ற மும்மத
(3) நீரும் பெருகி வந்த கிழ யானைக்கு
மூத்தோன் ஆகி ... மூத்த சகோதரனாக விளங்கினாய்.
நால்வாய் முகத்தோன் ... [நால்வாய் = இரு பொருள் - நான்கு (4)
மற்றும் வாயினின்று] தொங்கும் துதிக்கை முகத்தோனும்,
ஐந்துகைக் கடவுள் ... ஐங்கரங்களை (5) (தோளிலிருந்து நான்கு
கரங்களும், துதிக்கையும்) உடைய கடவுளும்,
அறுகு சூடிக்கு ... அறுகம் [அறுகம் = இரு பொருள் - ஆறு (6) மற்றும்
அறுகம் (புல்)] புல்லைச் சூடியவனுமான கணபதிக்கு
இளையோன் ஆயினை ... இளைய சகோதரன் என விளங்குகிறாய்.
ஐந்தெழுத்து அதனில் ... நமசிவாய என்ற பஞ்ச (5) அட்சரத்தின்
மூலமாக
நான்மறை உணர்த்து ... நான்கு (4) வேதங்களாலும் இவரே இறைவன்
என்று உணர்த்தப் பெறுபவரும்,
முக்கட் சுடரினை ... சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடரை (3)
தம் கண்களாக உடையவரும்,
இருவினை மருந்துக்கு ... நல்வினை, தீவினை இரண்டிற்கும் (2)
மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு
ஒரு குருவாயினை ... ஒப்பற்ற ஒரு (1) குருநாதனாக அமைந்தாய்.
ஒருநாள் ... முன்பொரு (1) நாள்
உமையிரு முலைப்பால் அருந்தி ... உமாதேவியின் இரு மார்பிலும்
சுரந்த ஞானப்பாலைப் பருகி
முத்தமிழ் விரகன் ... இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும்
வல்லவனாகி,
நாற்கவி ராஜன் ... நால்வகைக் கவியிலும் அரசனாகி,
ஐம்புலக் கிழவன் ... பஞ்ச இந்திரியங்களின் உணர்ச்சிகட்கு
அடிமைப்படாத உரிமையாளனாகி,
அறுமுகன் இவன் என ... ஆறு முகங்களை உடைய ஷண்முக
மூர்த்தியே இவன்தான் என யாவரும் கூற
எழில்தரும் அழகுடன் ... இளமை ததும்பும் அழகோடு
கழுமலத்து உதித்தனை ... சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத்
தோன்றினாய்.
அறுமீன் பயந்தனை ... கார்த்திகைப் பெண்களாகிய ஆறு
நக்ஷத்திரங்களும் பெற்ற புதல்வனாகினாய்.
ஐம் தரு வேந்தன் ... கற்பகம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம்,
அரிசந்தனம் என்ற ஐந்து தேவ விருட்சங்கள் இருக்கும்
தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய்.
நான்மறைத் தோற்றத்து ... நான்கு மறைகளைப் போன்று மிக
ரகசியமானதும்,
முத்தலைச் செஞ்சூட்டு ... மூன்று பிரிவுகளோடு சிவந்த
கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான
அன்றிலங் கிரி ... அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட
மலையை
இரு பிளவாக ... இரண்டு கூறாகப் பிளக்குமாறு
ஒரு வேல் விடுத்தனை ... ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய்.
காவிரி வடகரை மேவிய குருகிரி ... காவிரியின் வட பாகத்தில்
விளங்கும் சுவாமிமலையில் இருக்கும்
ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற ... சரவணபவ என்னும்
உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத
கமலங்களைப் போற்ற,
ஏரகத்து இறைவன் என இருந்தனையே. ... திருவேரகத்தின்
இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய்.

திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த பாடல்.
                                 1
                              1 2 1
                           1 2 3 2 1
                        1 2 3 4 3 2 1
                     1 2 3 4 5 4 3 2 1
                  1 2 3 4 5 6 5 4 3 2 1
               1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
               . . . . . . . . . . . . . . . . . . . . . . .
                   இடையில் தேர் தட்டு
               . . . . . . . . . . . . . . . . . . . . . . .
               1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
                  1 2 3 4 5 6 5 4 3 2 1
                     1 2 3 4 5 4 3 2 1
                        1 2 3 4 3 2 1
                           1 2 3 2 1
                              1 2 1
                                 1

Similar songs:

1326 - ஓருரு வாகி (திருவெழுகூற்றிருக்கை)

தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா

1327 - சைவ முதல் (மதுரை)

தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா

Songs from this thalam திருவெழுகூற்றிருக்கை

956 - அலகு இல் அவுணரை

957 - ஆனைமுகவற்கு

958 - பரவு நெடுங்கதிர்

959 - பழிப்பர் வாழ்த்துவர்

960 - சீத வாசனை மலர்

961 - புருவச் செஞ்சிலை

962 - முகமெலா நெய்

963 - ஏலப் பனி நீர்

965 - நீதத்துவமாகி

966 - மனநினை சுத்த

967 - முத்து நவரத்நமணி

1327 - சைவ முதல்

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song